Published Date: September 27, 2024
CATEGORY: EVENTS & CONFERENCES
சேவைகள் மட்டுமின்றி உற்பத்தியில் ஐடி துறைகள் கவனம் செலுத்த வேண்டும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சேவைகள் வழங்குவது மட்டுமின்றி பொருட்கள் உற்பத்தியிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சிஐஐ கோவை மண்டலம் சார்பில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் குறித்த 'கனெக்ட் கோவை' கருத்தரங்கம் கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. 'வளர்ச்சிக்கான மாற்றத்தை வழங்கக்கூடிய தொழில்நுட்பத்தை தழுவி கொள்ளுதல்' என்ற கருவில் நடந்த இந்நிகழ்வில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசும் போது, இந்திய ஐடி துறையில் திறமையானவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஐடி துறையில் சேவைகளை வழங்குவது மட்டுமின்றி பொருட்கள் உற்பத்தியிலும் ஆர்வம் காட்ட வேண்டும். டேட்டா சயின்ஸ், சேர்க்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் பல சிறப்பு மையங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தொழில்நுட்ப உலகில் தமிழ்நாடு சிறந்த இடம் பிடிக்க வேண்டும் என்றார்.
பாஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ், கோவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் நவேத் நாராயணன், சிஐஐ கோவை கிளை தலைவர் ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் ராமசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் தனசேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Media: Hindu Tamil